Friday, 11 September 2015

ஆற்றுத் தூய்மைக்கேடு


இறைவனின் உன்னத படைப்புகளில் ஒன்றான ஆறு மனிதர்களுக்குப் பல வகையில் உதவியாக இருக்கிறது. ஆற்று நீரைக்கொண்டு சிலர் தங்களது அன்றாட வேலைகளைப் பூர்த்திச் செய்கின்றனர். எடுத்துக்காட்டாகத் துணி துவைத்தல், குளித்தல், குடித்தல் போன்றவையாகும். இவ்வாறாகப் பலனளிக்கக்கூடிய ஆறுகள் இன்று பலவகையில் தூய்மைக்கேட்டை எதிர்நோக்கி வருகின்றன. இவையாவும் மனிதனின் செயலால் விளைகின்றன என்பதை நாம் மறுக்க இயலாது. ஆற்றுத் தூய்மைக்கேடு பல காரணங்களால் விளைகின்றது.
 முதலாவதாகப் பொறுப்பற்ற தொழிற்சாலைகளினால் இந்த ஆற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதை நாம் காணலாம். நம் நாட்டில் பல தொழிற்சாலைகள் ஆற்றோரங்களில் அல்லது அதன் அருகில் இருக்கின்றன. இத்தொழிற்சாலைகள்  கழிவுப்பொருளை நேரடியாகவே ஆற்றில் கொட்டுகின்றன. குறிப்பாக, மூலப்பொருள் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள் போன்றவை கழிவுப்பொருளை அப்புறப்படுத்த ஆற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாகக், கிள்ளான் ஆறு தூய்மைக்கேட்டை அடைவதற்கு இத்தகைய தொழிற்சாலைகளின் கழிவுப்பொருள்கள் பெருங்காரணமாக விளங்குகின்றன.
அடுத்து, நம் நாட்டில் பரவலாக நடைபெறும் வெட்டுமரத் தொழிலினாலும் இந்த ஆற்றுத் தூய்மைக்கேடு  ஏற்படுகின்றது. மலைப்பிரதேசங்களில் நடைபெறும் வெட்டுமரத் தொழிலினால் ஆற்றுத் தூய்மைக்கேடு மிகவும் மோசமடைந்துள்ளது. இவ்விடங்களில் நடைபெறும் துரித வெட்டுமரத் தொழிலினால் மண்சரிவு ஏற்படுகின்றது. குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த மண்சரிவு மிகவும் மோசமடைகின்றது. இந்த மண்சரிவு ஆற்றோடு கலப்பதினால் ஆறு தூய்மைக்கேட்டை அடைகின்றது. ஆற்றில் போய்ச் சேரும் மண்ணால் ஆற்றின் ஆழம் குறைந்து, தீடீர் வெள்ளம் ஏற்படுகிறது.
மேலும், கட்டுமானத் தொழிலாலும் ஆற்றுத் தூய்மைக்கேடு நம் நாட்டில் மோசமடைந்துள்ளதை நாம் மறுக்க இயலாது. வீடமைப்புத் திட்டங்களினால் ஆறுகள் தூய்மைக்கேட்டை அடைந்துள்ளதை நாம் பரவலாகக் காணலாம். அங்கு நடைபெறும் இத்திட்டங்களினால் மண்சரிவு ஏற்பட்டு ஆறுகள் தூய்மைக்கேட்டிற்கு உள்ளாகின்றன. எடுத்துக்காட்டிற்குப் பிரேசர் மலையில் கோல்ப் மைதானத் திட்டத்தினால் அதன் அருகே உள்ளஜிரியாவ்நீர்வீழ்ச்சி மிகவும் மோசமான தூய்மைக்கேட்டிற்கு உள்ளாகியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 அடுத்து, மக்கள் வசதிக்காகப் போக்குவரத்துத்துறை மேம்பாடடைந்துள்ளது. இதன் தொடர்பாக நாட்டின் ஆங்காங்கே காட்டை அழித்து நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினாலும் மண்சரிவு ஏற்பட்டு ஆறுகள் தூய்மைக்கேடு அடைகின்றன. பெரிய ஆறுகளுக்கிடையே பாலம் அமைக்கும் பொழுது சிறிய கட்டைகள், மணல் மற்றும் அங்கே கட்டுமானத்திற்குப் பயன்படுத்தக்கூடிய மீதப் பொருள்களை ஆற்றிலே போட்டுவிடுகின்றனர். இதனால் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டுத் தூய்மைக்கேடு ஏற்படுகிறது.
 இறுதியாக, ஆற்றோரங்களில் வாழுகின்ற மக்களாலும் ஆற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுகின்றது. குறிப்பாகக், கிள்ளான், பென்சாலா, பகாங் ஆறு போன்ற ஆற்றோரங்களில் நிறைய வீடுகள் இருப்பதை நாம் காணலாம். இவர்கள் தங்கள் அன்றாட கழிவுப்பொருள்களை அப்புறப்படுத்துவற்கு ஆறுகளையே உபயோகிக்கின்றனர். இதனால், தினமும் ஏராளமான குப்பைகளை இந்த ஆறுகள் சுமக்க நேரிடுகின்றன. இதனால், ஆற்றுத் தூய்மைக்கேடு மிகவும் மோசமடைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஆற்றோரங்களில் காணப்படும் கால்நடை வளர்ப்புத் திட்டத்தினாலும் நம் ஆறுகள் மிகவும் மோசமான தூய்மைக்கேட்டை அடைந்துள்ளன.

 ஆகவே, சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு பாடுபட வேண்டும். ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வுஎன்பது போல நாம் வசிக்கும் இடத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டுப்பணி முறையில் சுத்தப்படுத்தினால் நாம் சுகாதாரமாக நோய்நொடியின்றி வாழலாம். அதோடு அரசாங்கமும் இச்சிக்கலைக் களைவதில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆற்றோரங்களில் காணப்படும் குடியேறிகளை மாற்று இடங்களுக்கு மறுகுடியேற்றம் செய்ய ஆவனச் செய்ய வேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வெட்டுமரத்தொழில் நடைபெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்க வேண்டும். ‘நமது ஆற்றை நேசிப்போம்என்னும் அரசாங்கத்தின் சுலோகத்தை நாடு தழுவிய நிலையில் செயல்படுத்தினால் ஆற்றின் தூய்மையைப் பேணிக் காக்க இயலும்.

No comments:

Post a Comment