Friday, 11 September 2015

பணம்


பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்என்னும் பழமொழி நாம் அறிந்த ஒன்றே. இந்தக் கலியுகக் காலத்தில் பணம் இல்லாதவன் பிணமாகக் கருதப்படுவான். பணம் என்றால் என்ன? உங்கள் இமைக் கதவுகளை மூடி சிந்தனை என்னும் சன்னலைத் திறந்து பார்த்தால் பதில் கிட்டும். பணம் என்றால் ஒரு மதிப்புள்ள நாணயம் என்று பொருள்படும். பணம் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் முதல் இடத்தை வகிக்கிறது.
 இவ்வுலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதன் தனி வரலாறு உண்டு. அது போல, பணம் எப்படித் தோன்றியது என்ற வரலாறும் உண்டு. முற்காலத்தில் பணம் நாணய வடிவில் இருந்தது. இந்நாணயங்கள் செம்பு, ஈயம், தங்கம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டன.. மேலும், நாணயங்கள் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டன. அவை வட்டம், சதுரம், செவ்வகம், முதலை வடிவம் போன்ற  வடிவங்களாகும். அன்றுமுதல் இன்றுவரை பணம் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மனிதன் தனக்கு வேண்டிய சிறுபொருளை வாங்குவதற்குக்கூடப் பணம் தேவைப்படுகிறது.
 பணத்தை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமாக அழைக்கின்றனர். மலேசியாவில் ரிங்கிட், இந்தியாவில் ரூபாய், இந்தோனிசியாவில் ரூப்பியா, அமெரிக்காவில் டாலர், சீன நாட்டில் யென், இங்கிலாந்து நாட்டில் பவுன் டெர்லிங், தாய்லாந்தில் பாட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு நாட்டின் நாணய மதிப்பும் மற்ற நாடுகளின் நாணய மதிப்போடு ஒப்பிடுகையில் வேறுபட்டிருக்கின்றது. எடுத்துக்காட்டிற்கு, 100 இந்திய ரூபாய் நம் மலேசிய மதிப்பில் ரிங்கிட் 8.00 ஆகும்.
 ‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலேஎன மொழிவார்கள். பணம் மனிதனுக்குப் பல நன்மைகளைத் தருகின்றது. பணம் இருந்தால் மனிதன் தான் விரும்பும் பொருள்களை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, ஆபத்து அவசர வேளைகளில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் நமக்குக் கைகொடுக்கிறது. மேற்கல்வியைத் தொடர்வதற்கும் வீடு, வாகனம், நிலம் போன்ற சொத்துகளை வாங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது.
 பணம் உள்ளவர்களிடம் சில நற்குணங்கள் மறைந்து வருகின்றன. அதிக செல்வம் கொண்டவர்களிடம் தற்பெருமை, பேராசை, சுயநலம் போன்ற குணங்கள் குடிகொள்கின்றன. ஏழை எளியவர்களுக்கு உதவ அவர்களின் மனம் தயங்குகின்றது..  எனவே, பணம் படைத்தவர்கள் வறியவர்களுக்கு உதவ வேண்டும்.
 பணத்தைச் சேமிக்கும் வழிகள் பல உள்ளன. ‘ஒரு காசு பேணின் இரு காசு தேரும்என்பது போல சிறுகச் சிறுகச் சேமித்தால் அது நாளடைவில் பெருந்தொகையாக மாறிவிடும். நாம் பணத்தை உண்டியலில், கூட்டு முறையில், காப்புறுதியில் சேமிக்கலாம். சேமிப்பு, குடும்ப மேம்பாட்டிற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவி புரியும்.

 ஆகவே, ‘அருள் இல்லாதவருக்கு அவ்வுலகமில்லை, பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகமில்லைஎன்னும் திருவள்ளுவரின் வாக்கு முக்காலத்திற்கும் பொருந்தும். இருப்பினும், பணத்திற்கு அடிமையாகாமல், அதனை முறையாகப் பயன்படுத்தி நன்மைகள் அடைவோமாக!

3 comments: