Friday, 11 September 2015

கணினி



தற்பொழுது உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கருவி கணினி ஆகும். கணினியின் பயன்பாடு உலக அரங்கில் பரவிக்கொண்டிருக்கிறது. நமது நாட்டிலும் கணினியின் பயன்காட்டுத் தீப்போல்பரவி வருகிறது என்பதை மறுக்க இயலாது. நமது முன்னாள் பிரதமர் விடுத்தவீட்டிற்கு ஒரு கணினிஎன்னும் கோரிக்கையும் இதற்கு ஒரு காரணமாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் கணினி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி, தொழிற்துறை, வியாபாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் கணினி வெற்றிநடை போடுகிறது.
 கணினி மக்களின் வேலைகளைச் சுலபமாக்குகிறது. நாம் நமது பாடங்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்யவும் அலுவலகத்தில் தயாரிக்க வேண்டிய அறிக்கைகளைச் செய்யவும் கணினி தேவைபடுகிறது. நாம் கைகளால் தயாரிக்கும் அறிக்கைகள் சில சமயம் எழுத்து வடிவங்களாலும் நேர்த்தியின்மையாலும் மனநிறைவை ஏற்படுத்தாது. ஆனால், கணினியால் தயாரிக்கப்படும் அறிக்கைகளை நாம் நமது நிறைவுக்கு ஏற்றவாறு தயாரித்துக் கொள்ளலாம். பலவகையான எழுத்து வடிவங்களையும் வண்ணங்களையும் பயன்படுத்தித் தெளிவாகவும் அழகாகவும் அறிக்கையைத் தயாரிக்கலாம்.
 கணினி மக்களின் நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் சிக்கனப்படுத்துகிறது. நாம் கைகளால் அறிக்கைகளைத் தயாரிக்கும் பொழுது நமது கைகளுக்குச் சோர்வு ஏற்படுகிறது. மாறாகக், கணினியைப் பயன்படுத்தும் பொழுது விரல்களை மட்டும் பயன்படுத்தி விசைக்கருவியை அழுத்தினால் போதும். அறிக்கை தயாராகிவிடும். அறிக்கைகளைத் தயாரிக்கத் தூவல், அழிப்பான், அடிக்கோல், இன்னும் சில பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தாமலேயே இவற்றின் பயன்பாட்டைக் கணினி மூலம் அடையலாம். மேலும் இவற்றை வாங்கும் செலவுகளையும் குறைக்கலாம்.
 அலுவலகங்களில் தேவையான முக்கிய விவரங்களைச் சேமித்து வைக்கவும் பாதுகாக்கவும் கணினி தோள் கொடுக்கிறது. கணினியில் உள்ள விவரங்களை நம்மால் எளிதாகப் பெற முடியும். மேலும் வங்கிகளில் கணினி ஒரு முக்கியமான கருவியாக உள்ளது. மக்களின் சேமிப்பு விவரங்களைக் கணினி துல்லியமாகக் கண்டுபிடிக்கிறது. இதனால், வேலைகள் எளிதாகின்றன.
 கணினி மக்களின் நேரத்தை நல்ல வழியில் செலவிட வகை செய்கிறது. இணையத்தளம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகிறது. கணினியில் உள்ள விளையாட்டுகள் வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்புவர்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்து மன அழுத்தத்தையும் குறைக்கிறது. தொழிற்நுட்பம் சம்பந்தமான தகவல்களைப் பெறவும் மக்களின் அறிவை வளர்க்கவும் கணினி முக்கியப் பங்காற்றுகிறது.தொடர்ந்து சிறுவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை நல்வழியில் செலவிட இவ்வகையான விளையாட்டுகள் துணைபுரிகின்றன.
 கணினி இயந்திரங்களில்  ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்யவும் உதவுகிறது. தொற்சாலைகளில் இயந்திரங்களைக் கொண்டுதான் அதிக வேலைகளைச் செய்கின்றனர். அவற்றில் ஏற்படும் கோளாறுகளுக்குக் கணினியைக் கொண்டுதான் பழுது பார்ப்பர். அந்த இயந்திரங்களைச் சீராக இயக்குவதும் கணினியே. எனவே, வீடுகளில் மட்டுமல்லாது தொழிற்சாலையிலும் கணினியின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

 கணினி மக்களின் வாழ்க்கையிலும் அன்றாடத் தேவைகளுக்கும் மிக அவசியமாகும். கணினி பற்றியும் அதன் இயக்கத்தைப் பற்றியும் நாம் அறிந்து பயன்படுத்தினால் அதன் முழுப்பயனையும் அடைவோம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.

16 comments: