Friday, 11 September 2015

தாய்


மண்ணில் குழந்தையாய்த் தவழ்ந்து, சிறுமியாய் ஓடி விளையாடி மங்கையாய் வாழ்க்கையை இரசிக்க ஆரம்பிக்கும் ஒரு பெண் தாய் என்னும் அந்த உயர்ந்த நிலையை  அடையும்போதுதான் முழுமையான ஒரு பெண்ணாக ஆகிறாள். தாய்மை என்பது அந்த இறைவனால் பெண்களுக்கே வழங்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும்.

தாய் என்பவள் ஒன்பது மாதங்கள் நம்மைக் கருவறையில் சுமந்து, நாம் உதைக்கும் வலியையும் பொறுத்துக் கொண்டு அதைச் சுகமாகக் கருதும் ஒரே உயிராகும். குழந்தை பிறந்த பிறகு, தாய் தனது இரத்தத்தையே பாலாக்கி, பாலூட்டித் தாலாட்டுவாள். தொப்புள் கொடி அறுக்கப்பட்டாலும் தாய்க்குத் தனது குழந்தை மீது உள்ள அன்பும் அக்கறையும் குறையவே குறையாது. இரவு பகல் பாராது தாய் தனது குழந்தையைக்கண்ணை இமை காப்பது போலவளர்ப்பாள்.

 ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலேஎன்னும் பாடல் வரி நமக்கு உணர்த்தும் கருத்து யாது? ஒரு குழந்தை வாழ்வில்குன்றின் மேலிட்ட விளக்கைப் போல்ஒளிவிடவும் அல்லதுகுடத்திலிட்ட விளக்கைப் போல்மங்கிவிடவும் அச்சாணி ஆகிறாள் தாயானாவள். தன் குழந்தைக்கு இவர்தான் தந்தை என்று அடையாளம் காட்டுகிறவளும் தாய்தான். இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று தன் பிள்ளைக்கு எடுத்துகாட்டாக, இருப்பவளும் தாய்தான். இதற்குக் காரணம் ஒரு குழந்தை பிறந்தது முதல் தாயின் பேச்சு, செயல், வேலை, கவனிப்பு ஆகியவற்றைத் தினமும் பார்ப்பதால் அந்நடவடிக்கைகளே அக்குழந்தையின் மனத்தில்பசுமரத்தாணிபோல்பதிகின்றன. அவர்கள் பெரியவர்களானதும் அவற்றையே பின்பற்றுகின்றனர்.
 மேலும், தாய் நமது முதல் தெய்வமாவார். இதை அறிந்துதான் நமது மூத்த கவிஞர்கள்தாயிற் சிறந்த கோயிலுமில்லைஎன்று பாடியுள்ளனர். தாயை மதிக்காமல் அவரது வார்த்தைகளைச் செவி சாய்க்காமல் அருகில் வாழும் இத்தெய்வத்தைப் போற்றாமல், பல கோயில்களுக்கு நற்கதித் தேடிப் போனால் அது கிட்டாது. மாறாகப் பாவங்களே வந்து சேரும். தாயின் வார்த்தைகளைக் கேட்டுப் பின்பற்றினால் நமது வாழ்வு வளம் பெறுவது உறுதி.
 தாயே தன் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் கவலைகளையும் போக்கக்கூடியவள். தன் குழந்தைகளுக்கு வரும் சிக்கலைத் தன் சிக்கலாக நினைத்துத் தீர்ப்பாள். பிள்ளைகள் தங்கள் மனச்சுமைகளைத் தாயிடம்தான் கூறுவார்கள். தாய்  தன் பிள்ளைகள் கூறுவதை மற்றவர்களிடம் கூறாமல்  தன் மனத்திலேயே வைத்துத் தீர்வு காண்பாள். தன் பிள்ளையைத் தன் மடியில் படுக்க வைத்து ஆதரவு தருவாள். எனவேதான், தாய் நமக்கு ஒரு சிறந்த தோழியாகவும் சகோதரியாகவும் ஆசிரியைர¡கவும் ஆலோசகராகவும் திகழ்கிறாள்.
 தற்பொழுது பிள்ளைகள் சிலர் தங்கள் தாயின் பாசத்தையும் தியாகத்தையும் மறந்து அவரை உதாசினப்படுத்துகின்றனர். தாய் எப்போதும் தனது நேரத்தையும் வாழ்வையும் தன் பிள்ளைகளுக்காகவே அர்ப்பணித்துப் பிள்ளைகளின் அன்பை மட்டும் எதிர்பார்க்கும் தியாகியாவாள். ஒவ்வொரு பிரவசத்தின் போதும் மறுபிறவி பெறும் தாயின் தியாகத்தை மறந்தவன் மனிதனல்ல. ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போலஒருநாள் அத்தாய் இல்லாதபோதுதான் அவரின் அன்பை உணர்வான்.

 நம்மைச் சீரும் சிறப்புடனும் வளர்த்த தாயை, எப்பொழுதும் அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அத்தாயின் உள்ளம் மகிழ்ச்சி அடையும். நாமும் மனநிம்மதியுடன் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். உலகில் நமக்கெனப் பல உறவுகள் இருந்தாலும், நம் முன்னேற்றத்தைக் கண்டு பெருமிதம் அடையும் ஒரே உள்ளம் நம் தாயுள்ளம்தான். எனவே, நம்மைச் சீராட்டிப், பாலூட்டி வளர்த்த தாயை நாம் எப்பொழுதும்கண்ணை இமை காப்பது போலக் காத்துப் போற்றுவோம்.

1 comment: