வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும் நாய்க்கு இருக்கும் மதிப்பே தனி தான்.
நன்றியுள்ளது என்பது மட்டுமல்ல பாதுகாப்பு என்று வந்தால் மிரட்டி எடுக்கும். சிலருக்கு நாய் என்றால் உயிர்! சிலருக்கு அருவருப்பு. எனக்கு நாய் என்றால் உயிர்
.

நாய் மீதான விருப்பம் என்பது ஜீனில் கூட இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக நாய் மீது விருப்பம் கொண்டுள்ளவர்கள் இருக்கிறார்கள். இது எங்கள் குடும்பத்திலேயே உண்டு.
எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறையாக நாய் மீது அன்பு கொண்டுள்ளவர்கள் இருக்கிறார்கள். எங்கள் தாத்தா காலத்தில் இருந்து என்னுடைய தலைமுறை வரை எங்கள் வீட்டில் நாய் மீதான அன்பு பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது.
தற்போது என்னுடைய பையனும் நாய் என்றால் பிரியமாக இருக்கிறான்.
கிராமத்தில் இருந்து நகருக்கு வந்ததால் எங்களால் தொடர்ந்து நாயை வளர்க்க முடியவில்லை. காரணம், வேறு எங்காவது செல்லும் போது அதைப் பராமரிக்க, சாப்பாடு கொடுக்க என்ற நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் தொடர்ந்து வளர்க்க முடியவில்லை ஆனால், நாய் வளர்க்க முடியவில்லையே என்று எனக்கு இருக்கும் வருத்தம் அளவிடமுடியாதது.
இது ஒரு ஏக்கமாகவே மாறி விட்டது. எங்காவது நாய்க் குட்டியைப் பார்த்தால் கையில் எடுத்துக்கலாம் தடவிக் கொடுக்கலாம் என்று தோன்றும்.
கிராமத்தில் இருந்த போது ஒரே சமயத்தில் மூன்று நாய்கள் இருந்தன. ஒரு பொம்மரேரியன் மற்றும் இரு நாட்டு நாய்கள். நாட்டு நாய்கள் நீங்கள் எப்படி நடந்து கொண்டாலும் எப்போதும் ஒரே மாதிரி அன்பை வெளிப்படுத்தும் ஆனால், பொம்மரேரியன் நாய்கள் பொறாமைக் குணம் கொண்டவை.
இவற்றைக் கண்டு கொள்ளாமல் நாட்டு நாயிடம் நாம் கொஞ்சம் கொஞ்சினால் போதும் இவைகளுக்கு பொறுக்காது. உடனே அவற்றுடன் சண்டைக்கு வந்து விடும். நாய்கள் சைக்கலாஜி சுவாரசியமானவை
.


வீட்டில் இருக்கும் போது நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் காலுக்குள்ளயே சுற்றிக்கொண்டு இருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு நாய் ஒரு வரப்பிரசாதம்.
நாங்கள் தோட்டத்தில் வசித்த போது “டைகர்” என்ற நாட்டு நாய் வளர்த்தோம். ஒருவர் நன்றியுடன் இருந்தால் சம்பளம் கொடுக்காம நாய் மாதிரி சாப்பாடு போட்டு வளர்க்கிறார்கள் என்று கூறுவார்கள் அல்லவா. முற்றிலும் உண்மை.
நாங்கள் தோட்டத்தில் இருந்ததால் இரவில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பாம்பை கொல்லப் / அடிக்கப் பயன்படுத்தும் கம்பு எப்போதும் தயாராக இருக்கும். பாம்பு வருகிறது என்றாலே டைகர் கத்தும் சத்தத்தில் வித்யாசத்தை உணரலாம்.
வழக்கமாக கத்துவதற்கும் பாம்பு போல ஒரு ஐந்து வந்தால் அதைப் பார்த்து கத்துவதற்கும் வித்யாசம் இருக்கும். இதை வைத்தே நாங்கள் எச்சரிக்கையாகி விடுவோம். நாங்கள் டைகருக்கு சாப்பாடு மட்டுமே போட்டோம் ஆனால், எங்களுக்கு இவன் செய்த உதவிக்கு நாங்கள் ஆயுளுக்கும் கடமைப்பட்டு இருக்கிறோம்.
வாசலில் தான் கட்டி வைத்து இருப்போம் இதைத் தாண்டி எவரும் உள்ளே செல்ல முடியாது. யார் வந்தாலும் கதவை திறக்கும் முன் டைகர் கட்டப்பட்டு இருக்கிறதா என்று உறுதி செய்த பிறகே நுழைவார்கள். அந்தளவிற்கு மிரட்டலாக இருக்கும். எனக்கு மட்டும் கட்டுப்படும்.
அதன் வாழ்நாளில் குறைந்தது 50 பாம்பிற்கு மேல் கொன்று இருக்கும். இறுதியில் ஒரு பாம்புடன் சண்டை போட்டு இறந்தது எங்கள் குடும்பத்தில் எவராலும் தாங்க முடியவில்லை. இதைப் புதைக்கும் போது சக மனிதருக்கு செய்யும் அனைத்து கடமைகளையும் செய்து புதைத்தோம்.
14 வயதாகியும் நல்ல உடல் நலத்துடன் இருந்த டைகர் பாம்புக் கடியால் விஷம் தாக்கி இறந்தது இன்று நினைத்தாலும் துக்கமாக இருக்கிறது. டைகர் இறந்தாலும் பாம்பும் காலையில் இரண்டு துண்டாகக் கிடந்தது.

இதன் பிறகு சிபி, கஃபி என்ற இரு நாய்கள் இருந்தன. இதில் சிபி என்பது பொம்மரேரியன் கஃபி என்பது நாட்டு நாய். சிபி போல ஒரு நாய் எங்களுக்கு திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
ஒரு குழந்தையைப் போல எங்கள் குடும்பத்தினருடன் இருக்கும். நாங்கள் எங்காவது வெளியே சென்றால் நாங்கள் வரும் வரை வேறு எவரும் உணவு கொடுத்தால் கூட சாப்பிடாது. சோர்ந்து போய் இருக்கும்.
நாங்கள் வரும் சத்தம் கேட்டால் இது அடையும் சந்தோசத்தைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும். பொம்மரேரியனுக்கு ஒரு குணம் இருக்கிறது. எங்கே இருந்தாலும் ஏதாவது அடியில் தான் படுத்து இருக்கும். கட்டில் இருந்தால் கட்டில் அடியினுள் படுத்து இருக்கும்.
என் அம்மாவின் கட்டில் அடியில் தான் பெரும்பாலும் படுத்து இருக்கும். என் அம்மா / நாங்கள் யாரும் தூங்கும் போது வெளி ஆள் யாரும் நுழைய முடியாது. முதலில் உர்ர்ர் என்ற சத்தம் மட்டும் வரும்.. அதையும் மீறி யாரும் சென்றால் கடி நிச்சயம்
.

நான் ஏழாம் வகுப்பில் இருந்து மாணவர் விடுதியில் தங்கித் தான் படித்தேன். எனவே விடுமுறைக்கு மட்டுமே வீட்டில் இருப்பேன் இருந்தாலும் இந்த நாய்கள் என் மீது வைத்து இருந்த அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கஃபி க்கு கண்பார்வை மிகவும் உறுதி. நான் விடுமுறையில் வரும் போது நான் தூரத்தில் நடந்து வரும் போதே என்னுடைய நடையை வைத்தே கண்டு பிடித்து விடும். அப்போது கத்த ஆரம்பித்தால் நான் வந்து அவிழ்த்து விடும் வரை இதைக் கட்டுப்படுத்த முடியாது.
நான் அவிழ்த்து விட்டவுடன் அது செய்யும் அட்டகாசத்தை நினைத்தால் இன்றும் ஏக்கமாக இருக்கிறது.
பின்வரும் இந்தக் காணொளி எல்லாம் சும்மா ஜுஜுபி. எங்க கஃபி இது போல 10 மடங்கு இருக்கும் (மிகைப்படுத்தவில்லை). அப்படி என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்குங்க.
இதில் சரியாக ஒன்றாவது நிமிடத்தில் வரும் நாய் போல அடங்காமல் இருக்கும்.